சனி, 2 ஜூன், 2012

புதுமைப் பித்தன் எனும் எரிமலை



    ‘கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இதுதான் ஐயா பொன்னகரம்’ என்று முடியும் சிறுகதை எந்தவித சிறுகதைக் கோட்பாடுக்கும் உட்படாதது. இருந்த போதிலும் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எழுதிய மகத்தான உத்திகள் கொண்டு எழுதப்பட்ட கதைகளெல்லாம் பெறாத கவனிப்பை இது பெற்றது. இந்தக் கதையை எழுதியவர் சிறு வயதிலேயே மரணம் அடைந்த புதுமைப் பித்தன் என்னும் சொ. விருத்தாசலம்.
    மணிக்கொடியில் வேலை பார்த்தவர். மணிக்கொடி எழுத்தாளர்களின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர். எழுதுவதை முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்தவர். வாசன் இயக்கிய ஔவையார் திரைப்படத்தின் கதை கொத்தமங்கலம் சுப்புவால் எழுதப்பட்டது. இதே படத்திற்குப் புதுமைப்பித்த னும் கதை எழுதினார். அது நிராகரிக்கப்பட்டது. இவரின் கற்பனையில் உதித்த கதைக்கரு தான் பின்னர் ஏ.பி. நாகராஜனால் இயக்கப்பட்டு வெளிவந்த சரஸ் வதி சபதம் என்கிறார்கள்.
    மரபை மறுக்கும் அங்கதம், வாழ்க்கையில் நலிவுற்றவர்கள் பால் பரிவு. ஜாதி இந்துக்களிடம் வெறுப்பு, பணத்தின் மேலும், பணம் படைத்தவர்கள் மீதும் வன்மம், இதுதான் புதுமைப்பித்தன்.
    கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் கதையில் கதையின் நாயகன் சிவபெருமானை பாரிமுனை எஸ்ப்ளநேடு என்கிற இடத்தில் சந்திக்கிறார். சிவபெருமானுக்குக் கந்தசாமிப் பிள்ளைக்கு எந்த விதத்திலாவது உதவி செய்து விட வேண்டுமென்கிற துடிப்பு, கந்தசாமிப் பிள்ளைக்கு எப்படியாவது தாம் நடத்தும் சஞ்சிகைக்கு ஆயுள் சந்தாவாங்கி விட வேண்டு மென்கிற அவ சரம். கேட்டே விடுகிறார். கடவுள் கேட்கிறார். உம் ஆயுளா? பத்திரிக்கை ஆயுளா? என்று. கந்தசாமிப்பிள்ளை படுகிற அவதிகளைப் பார்த்துவிட்டு வரம் கொடுக்க விருப்பம் தெரிவிக்கும் போது கந்தசாமிப் பிள்ளை சொல்கிறார். உம்ம ஜாதியே அதற்குத்தானே லாயக்கு என்று.
    இதே கதையின் நீட்சியாக இன்னொரு கதையிலும் சிவன் வருகிறார். சிவன் இதில் பிழைப்புத் தேடி கதாநாயகனிடம் கேட்க அவர் பெரிய நாட்டியக்காரர் என்று சிபாரிசு செய்ய ஒருவரிடம் கூட்டிப் போகிறார். சிவன் பாம்புடன் மயான ருத்ரனாம்.... என்று ஆட ஆரம்பிக்க சிபாரிசு செய்ய வேண்டியவர், என் னய்யா.... இது பாம்பைப் புடிச்சுக் கூடையில் போடச் சொல்லுய்யா. குழந்தை கள் பார்த்தா பயந்துக்கப் போவுது. இதென்ன புலித் தோலைக் கட்டியிருக் காரு? புலித்தோல் மாதிரிப் பட்டைக் கட்டிக்கச் சொல்லு என்கிறார். சிவ னுக்குப் போதுமடா உலக வாழ்க்கை என்று தோன்றி விடுகிறது.
    மனித எந்திரத்தில் மளிகைக் கடையில் வேலை பார்ப்பவருக்கு பர்மாவுக்கு ஓடிப்போய் காசுக் கடை வைத்து பெரும் பணம் சம்பாதித்து ஊர் திரும்பி செல்வாக்காக வாழ வேண்டுமென்கிற ஆசை திடீரென்று தோன்றி விடுகிறது. கடைக்காசை எடுத்துக் கொண்டு துணிச்சலாகக் கிளம்பி விடுகிறார். நடு வழியில் பயம் பிடித்துக் கொள்ள ஊர் திரும்பி விடுகிறார். முதலாளி வீட்டிற்குப் போய்க் கடைச்சாவியை ஒப்படைத்து எடுத்த பணத்திற்குப் பற்று சொன்னவுடன் தான் நிம்மதிப் பெருமூச்சு வருகிறது அவருக்கு.
    துன்பக் கேணி என்று ஒரு நெடுங்கதை. அற்பத் தொகையைக் கடன் வாங்கிய தாழ்த்தப்பட்ட கூலி ஒருவன் எண்ணற்ற துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. அவனும் அவன் மனைவியும் தேயிலைத் தோட்டத்தில் போய்க் கொத்தடிமைகள் போல் வேலை செய்கிறார்கள். அவன் மனைவிக்குப் பறங் கிப் புண் வந்து விடுகிறது. ஆளே உருமாறிப் போய் ஊருக்குத் திரும்பும் அவன் ஞாபகம் வைத்துக்கொண்டு முதலாளியிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க எத்தனிக்கையில் அவர் பெருந்தன்மையாக விட்டுத் தள்ளு சவத்தை என்கிறார். இதை அவர் முன்னாமேயே சொல்லியிருந்தால் அவன் வாழ்க்கை  யில் அவ்வளவு துன்பப்பட நேர்ந்திருக்காது என்பதைக் கூட உணர்ந்து கொள்ள இயலாத பிரக்ஞை இன்மையில் தான் சமுதாயத்தின் மேல் மட்டத் தில் இருப்பவர்கள் இருக்சிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் கதை இது.
    ஒரு நாள் கழிந்தது கதையில் மளிகைக் கடைக்காரன் சொல்கிறான்; சாமி பழைய பாக்கியே இருக்கு. எனக்குக் குடுத்துக்கட்டாது. நான் பிழைக்க வந்தவன் என்று. அதற்குக் கதையின் நாயகர் சொல்கிறார் மற்றவர்கள் என்ன சாகவா வருகிறார்கள்? என்று.
    இந்தக் கதைகளைச் சற்று உன்னிப்பாகக் கவனிக்கும் போது புதுமைப்பித்தன் வறுமையை ஆராதிப்பது பளிச்சென்று தெரிகிறது. வறுமை யில் உழலுபவர்கள் அதை மீறி வெளியில் வருபவர்களாக இல்லை. வறுமை யிலேயே சுகம் காணுபவர்களாக இருக்கிறார்கள். வறுமையையோ சமூ கத்தின் சீர்கேடுகளையோ இறை நம்பிக்கையையோ பழக்க வழக்கங்க ளையோ எதிர்த்து நின்று குரல் கொடுப்பவர்களாக கதை மாந்தர்கள் உலா வருவதில்லை. இவற்றினூடே இருந்து கொண்டு இவர்களிடம் இவைகளிடம் காணப் படும் முரண்பாடுகளை அங்கத நோக்கில் விவரிக்கும் தன்மையே இவர் படைப்புகளில் காணப்படுகின்றது. இதற்காகத் தானோ என்னவோ இவர் வறுமையை விரும்பி மணந்து கொண்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதனாலேயே புதுமைப்பித்தன் ஒரு புரட்சியாளர் என்று பரவலாக அறியப் படுவது பிழையென்றும் அவர் ஒரு கலகக்காரர் மட்டுமே என்றும் குறிப்பிடத் தோன்றுகிறது.
    சுதந்திரப் போராட்டத்தின் பின் வந்த தலைமுறைகளில் எழுந்த திராவிட இயக்க எழுச்சி ஓரளவு முற்போக்கு சிந்தனை எழுச்சி. இவற்றின் காரண கர்த்தர்களோ முன்னெடுத்துச் செல்பவர்களோ யாருமே புதுமைப் பித்தனைத் தத்தம் குழுக்களைச் சேர்ந்தவர் என்று காண்பிப்பதில் அவ்வளவாக முனைப்பு காட்டாததற்கு மேற் கூறியவைகளே காரணம் என்று தோன்றுகிறது.
    புதுமைப் பித்தனின் குறுகிய வாழ்க்கை மிகவும் துன்பகரமானது. முழு நேர எழுத்தாளராக இருந்த அவர் வறுமையுடனும் டி.பியுடனும் போராடினார். கல்கி போன்றவர்களின் எழுத்தைக் கடுமையாகச் சாடிய அவர் கல்கி, ராஜாஜி போன்றவர்களிடம் துவேஷம் கொண்டிருந்தார். கல்கி பற்றியும் ராஜாஜி பற்றியும் அவர் எழுதிய மூனாவருணாசலமே என்கிற பாடல் பல இடங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. தம்முடைய தந்தையாரிடம் பிணக்கு. அதனால் அவர் பரம்பரைச் சொத்தை பாகம் செய்தபோது வளர்ந்த மனக்கசப்பு. அவர் கதை மாந்தர்களின் துன்பங்களுக்குச் சற்றும் குறைவில்லாதவை அவர் உண்மை வாழ்க்கையின் துன்பங்கள்.
    அவர் வாழ்வின் கடைசிநாட்கள் கல் நெஞ்சனையும் கரைய வைக்கும். தியாகராஜ பாகவதரின் கடைசிப் படமான ராஜமுக்திக்காக இப்படம் வெளிவரவில்லை. புனே சென்றவர் உடல் உபாதை காரணமாக அங்கிருந்து திரும்பி வந்து சில நாட்களில் மறைந்தார். மகாத்மா காந்தி கொலையுண்ட போது புனேயில் இருந்த அவர் பெனிஸிலின் ஊசி போட்டுக் கொண்ட தில் உடம்பு சற்று நேரானதாக எழுதுகிறார். அவர் சிதம்பர ரகுநாதனுக்கு எழுதிய கடிதங்களில் இந்த விவரங்களை நாம் அறிய முடிகிறது.
    புதுமைப்பித்தன் இறந்தவுடன், கண்ணாளா! எழுதி எழுதிக் கை வீங்கிற்றே! கடைசியில் உயிரையும் கொடுத்தாயே? என்று அவர் மனைவி கமலா கதறினாராம். கண்ணீரை வரவழைக்கும் புதுமைப்பித்தனின் முடிவைப் பார்க் கும் போது நமக்குமே அவர் எழுத்துக்கு உயிரை கொடுத்தார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
    உலகின் சில நியதிகளில் மிகவும் முக்கியமானது மாந்தர் அவரவர் தம் செய்தொழிலால் சமுதாய அந்தஸ்தை அடைவது என்பது. சிறப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையால் என்கிற திருவள்ளுவரின் வாக்கு எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும் மதங்களிலும் இனங்களிலும் காணப்படுகின்ற பொதுப்படையான தன்மை. நமது நாட்டில் இதற்கு ஜாதி என்கிற மோசமான பரிமாணமும் உண்டு. இதில் முக்கியமான ஒரு விஷயம் உள உழைப்பு செய்கிறவர்கள் உடல் உழைப்பு செய்கிறவர்களை விட வாழ்க்கை வசதிகளிலும் ஊதியம் போன்றவைகளிலும் மேம்பட்ட வர்களாக இருக்கிறார்கள்.
    இதை மறுதலித்து ஜான் ரஸ்கின் எழுதிய ருவேடி கூhந டயளவ என்கிற புத்தகத்தால் கவரப்பட்டுத் தான் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் சமுதாயக் கூடங்களை அமைத்தார். மகாத்மா காந்தி மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களிலிருந்து இப்படித்தான் மாறுபடுகிறார். சுதந்திரப் போராட்டத்துடன் சமூகப் போராட்டத்தையும் வேறு யாரும் இணைத்துப் பார்க்க வில்லை. அறைகளில் நடந்து வந்த சுதந்திரப் போராட்டங்களை ஒரு சமூக இயக்கமாக மகாத்மாவால் மாற்ற முடிந்ததற்கு அவர் வேறு பல சமூக சீர்திருத்தங் களையும் முன்னெடுத்துச் சென்றது தான் காரணம். இதற்கு அடிநாதமாக விளங்கியது மனிதன் தனக்குத் தேவையான உபகரணங்களையும் உற்பத்திப் பொருட்களையும் தானே தயாரித்துக் கொள்ள வேண்டம் என்று அவர் விழைந் தது. இதைத்தான் அவர் உள உழைப்பாளிகளுக்கும் உடல் உழைப்பாளிகளுக் கும்இடையே நிலவிய பொருளாதார அந்தஸ்து ஏற்றத் தாழ்வுகளுக்கான தீர்வாகக் கருதினார். இது தான் உண்மையில் அவர் கண்ட ராமராஜ்யம்.
    முற்போக்காளர்களின் மாட்சிமையில் தொழிற்சங்கவாதியும் உடலால் உழைப்பவனும் முதன்மை பெறுகிறார்கள். இதுவும் விரும்பத்தக்க விளைவைத் தர வில்லை என்பதை நாம் கம்யூனிஸ நாடுகளின் வீழ்ச்சியால் உணர முடிகிறது.
    சுதந்திரத்திற்குப் பின் வந்த தலைமுறைக்கு மகாத்மா காந்தி தந்த பல நிவாரணங்கள் ஏற்புடையனவாய் இருந்தன. பொது வாழ்வில் ஒழுக்கம், தூய்மை, வெளிப்படைத் தன்மை, இவற்றுடன் இழி தொழில் என்று கருதப்படுகிற தொழில்களைச் செய்பவர்கள் ஏனையோர் போல் முன் னேற வேண்டும் என்கிற அவா இவை எல்லோரிடமும் இருந்தன.
    மகாத்மா காந்தி மீது அளவற்ற பக்திவைத்திருந்த கல்கி போன்றோர் தம் வழியில் இதைச் செய்ய முயன்றார்கள். மகாத்மா காந்தி ,பாரதி போன்றோர் மீது பக்தி வைத்திருந்த புதுமைப் பித்தன் என்கிற எரிமலையும் இதைத் தான் செய்தது.
    தமிழ் இலக்கியப் போக்குகளை அலசும் பலரும் கல்கி, புதுமைப் பித்தன் இவர்களின் இலக்கியங்களை வெவ்வேறு மாறுபட்ட போக்குகளாகத் தான் பார்க்கிறார்கள். இது குறித்த பல்வேறு சச்சரவுகளும் சண்டைகளும் இப் போதும் நடந்து வருகின்றன.
    சற்று கூர்ந்து நோக்கும் போது இரு போக்குகளும் வெவ்வேறானவை அல்ல என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...