புதன், 23 மே, 2012

மகத்தான எழுத்தாளர் கல்கி


                        
            பிற்கால சோழர்களில் ஆதித்த கரிகாலன் கொலையுண்டதும் சுந்தர சோழனுக்குப் பிறகு உத்தம சோழன் பட்டத்துக்கு வந்ததும் சரித்திர நிகழ்வுகள். ஆதித்த கரிகாலன் கொலையுண்டது பாண்டிநாட்டு சதிகாரர்களால் என்று கூறப்பட்ட போதிலும் அது இன்றுவரை துப்புத் துலங்காத மர்மமே. இந்த மர்ம வலைப் பின்னலில் நந்தினி என்று ஒரு கற்பனா பாத்திரம் - இந்த நந்தினியின் பிறப்பு என்கிற மர்மம். இந்த மர்ம முடிச்சைக் கொஞ்சங் கொஞ்சமாய் அவிழ்க்கும் சுந்தர சோழர், அநிருத்த பிரம்மராயர், செம்பியன் மாதேவி, மதுராந்தகன், கருத்திருமன் ஆழ்வார்க்கடியான் என்பன போன்ற எண்ணிறந்த கதாபாத்திரங்கள்.
           மொத்தம் ஐந்து பாகங்கள். ஒவ்வொரு பாகமும் கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள் மீண்டும் மீண்டும் பிரசுரம் செய்தும் இன்றும் படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும் மகத்தான காவியத்தைத் தமிழில் எழுதியவர் சுதந்திரப் போராட்டத்தினால் ஈர்க்கப்பட்டு அதில் குதிக்க வேண்டி இறுதிவரை முடிக்காத பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்ட கல்கி என்னும் மா மனிதர். ராஜாஜியிடம் அளவற்ற பக்தி வைத்திருந்தவர். கர்நாடகம் என்கிற பெயரில் கலை விமர்சனம் செய்தவர். அனல் பறக்கும் தலையங்கங்களுடன் இளைஞர்களை சுதந்திரப் போராட்டத்தில் வீறு கொண்டு கலந்து கொள்ளச் செய்தவர்.
    எண்ணற்ற கதாபாத்திரங்கள் - படிப்பவர்களே சற்றுக் குழம்புகிற நிலை. இவ்வளவு கதாபாத்திரங்களைக் கையாண்ட போதிலும் எந்த வீரநாராயணபுரத்தில் கதையை ஆரம்பித் தாரோ அதே ஏரியில் கதையை முடிக்கும் துல்லிய அறிவுத் திறன் கொண்டிருந்தவர் கல்கி.
    பாரதியார் கவிதை, கட்டுரை, கதை என்று எழுதிக் குவித்தார் என்றாலும் அவர் கவிதையில் பேர் வாங்கிய அளவிற்கு உரைநடையில் பேர் வாங்கவில்லை. பாரதியாரின் குணா திசயக் கூறுகள் பல சமயங்களில் கவிஞன் என்கிற பட்டத்துக்கு பொருந்துகிறாற் போல் இருந்த தும் ஒரு காரணம்.
    முதல் கார்ட்டூன் வரைந்தவர், முதல் தேதிய இலக்கியவாதி, முதல் தமிழ் தேசியவாதி, முதல் தமிழ்ப் புரட்சியாளர், முதல் பெண்ணுரிமை விடுதலையாளர், முதல் ஜாதீய விடுதலை யாளர் போன்ற பல முதல்களுக்குத் தமிiழுப் பொருத்தவரை  சொந்தக்காரராக பாரதி இருந்த போதிலும் அவரை எல்லோரும் கவிஞராகத்தான் கருதினார்கள். அவரும் அதைத் தான் விரும் பியிருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
    அவரது அந்திமக் காலத்தில் வ.ரா என்கிற பாரதியின் சிஷ்யர் கிருஷ்ணமூர்த்தி என்கிற இளைஞரை ராஜாஜியிடம் அறிமுகம் செய்து வைத்தார். கிருஷ்ணமூர்த்தி கதைக்கு முன்னுரை ஒன்றை எழுதி வாங்கினார். அந்த முன்னுரையில் விமர்சிப்பதாய் இருந்தவைகளை ஆட் சேபித்து நீக்கக் கோரினார். அந்த இளைஞர் தான் கல்கி என்னும் மகத்தான எழுத்தாளர்.
    வினாடி வினாப் போட்டிகளில் இன்றும் மாமல்லபுரத்தைக் கட்டியது யார்? என்கிற கேள்விக்கு ஆயநர் என்று தவறாகச் சிலர் விடையிறுக்கிறார்கள் என்றால் அதன் பெருமை அவ்வளவு தத்ரூபமாக சிவகாமியின் சபதத்தில் ஒரு கற்பனை பாத்திரத்தைப் படைத்திருந்த கல்கியையே சாரும்.
    பார்த்திபன் கனவு சரித்திர நவீனத்தை அவர் முதல் முதலில் எழுதிய போது தான் சிவகாமியின் சபதம் என்கிற கதைக் கரு அவருக்கு உதயமாயிற்றாம். நமது தேசத்தின் உயிர்த் துடிப்பில் கலந்துள்ள ராமாயணம் கூட அவரையே அறியாமல் சிவகாமியின் சபதத்தில் நுழைந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது, அந் நாவலின் கதைப் பாங்கைச் சற்று உன்னிப்பாகக் கவனிக்கும் போது, இப்படிப் பார்க்கும் போது சிவகாமியின் சபதத்தை ராமயணத்துடன் ஒப்பிட்டால் பொன்னியின் செல்வனை மகாபாரதத்துடன் தான் ஒப்பிட வேண்டும்.
    பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்கள் எல்லாவற்றையுமே எனக்குத் தான் சொந்தம் என்று பிரத்யேகமாக உரிமை கொண்டாடும் இலட்சக்கணக்கானோர் இன்றும் தமிழ் மண்ணில் உண்டு. குந்தவை, வானதி, நந்தினி, வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியான், பூங்குழலி இவர்கள் போன்ற ஏனைய கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரையும் தத்தம் அந்தரங்க நண்ப ரென்றும் அவர்களைப் பற்றிப் பேசக் கூட மற்றவர்களுக்கு உரிமை கிடையாதென்றும் பிடி வாதம் பிடிக்கும் வீம்பு பிடித்தவர்கள் இன்றும் நிறைய பேர் இருப்பது கல்கியின் படைப்புத் திறனுக்குக் கட்டியம் கூறிக் கொண்டிருக்கிறது.
    பொன்னியின் செல்வனின் பெரிய பழுவேட்டரையரை   கடைசி பாகம் வரை வெறுக்காதவர் கிடையாது. எண்ணற்ற போர்க்களங்களில் பங்கு கொண்டு தம் உடலில் அறுபத்தி நான்கு  போர்க்காயங்களைச் சுமந்து கொண்டிருந்தவர் தம் மனைவி நந்தினியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு சுந்தர சோழன் மகன்கள் பட்டத்துக்கு வருவதற்குக் குறுக்கே நிற்கிறார். கடைசியில் சதிகள் அம்பலமாக ஆதித்த கரிகாலன் மரணத்திற்குத் தாம் தான் காரணம் என்ற அழுது குமுறுகிறார். அவர் குமுறுவது பெரிய சுழற்காற்றையும் இடி மின்னலை யும் ஒத்திருந்தது என்று கல்கி எழுதும் போது  படிக்கும் வாசகனும் பெரிய பழுவேட்டரையரின் கூடவே அழுகிறான். அத்தனை அத்தியாயமும் அவன் பழுவேட்டரையரிடம் கொண்டிருந்த வெறுப்பும் துவேஷமும் மாறி அன்பும் பச்சாதாபமும் பொங்குகிறது. கல்கியின் எழுத்து அப்படிப் பட்டது.
    இந்த நாவலை அவர் எழுத அநுராதபுரத்து வீதிகளில் திரிந்திருக்கிறார். தஞ்சையில் இடிபாடுகளுக்கிடையில் இருந்த சிங்காச்சியார் கோயிலை வைத்து அது சிங்கள நாச்சியார் கோயில் என்று அனுமானித்து அதன் அடிப்படையில் ஊமைச்சி கதாபாத்திரத்தைப் படைத்திருக்கிறார்.
    கடைசி அத்தியாயத்தில் மணிமேகலை என்னும் பெண் கதாநாயகன் வந்தியத் தேவன் மீது அளவற்ற காதல் கொண்டு அவன் நினைவாகவே வாழ்ந்து உயிர் விடக் காத்திருப்பவள். புரியாத இன்னதென்று விளங்காத மொழியில் மிழற்றுகிறாள். வந்தியத்தேவன் அது என்ன வென்று கேட்கக் குனிகிறார். அவன் கண்களிலிருந்து ஒரு நீர் முத்து மணி மேகலையின் நெற்றியில் விழுகிறது. கல்கி எழுதுகிறார்; ‘’ அவள் பேசுவது புரியாவிட்டால் என்ன?’’ என்று. படிக்கும் நாம் கண்ணீரைக் கட்டுப்படுத்தத் திணறுகிறோம். காதலை இதற்கு மேலும் துல்லிய மாக யாராவது காட்ட முடியுமா என்று அதிசயிக்கிறோம்.
    வரலாற்று நவீனங்களில் முத்திரை பதித்த கல்கி சமூக நவீனங்களையும் விட்டு வைக்கவில்லை. தியாகபூமி திரைப்படமானது. அலைஓசை அளவிலாப் புகழை அவருக்குப் பெற்றுத் தந்தது. அலைஓசையின் நாயகி சீதா வாழ்க்கையில் அவ்வளவு கஷ்டப்படுகிறாள். அவளுக்குக் காதில் கடைசியில் எப்போதும் அலைஓசை கேட்டுக் கொண்டேயிருக்கிறது அவள் சகோதரி தாரிணி குருடியாய் அவள் முன்னர் நிற்கும் போது கூட சகோதரியின் சுந்தர முகமே அவள் கண்களில் தெரிகிறது.
    அப்போது தான் மகாத்மா கொலையுண்ட செய்தி  வருகிறது. சீதாவும் சாரிசாரியாகச் செல்லும் ஜனங்களுடன் சேர்ந்து கொள்கிறாள். பல்வேறு முகங்கள் குணாதிசயங்கள் இவற்றினூடே அடிநாதமாக சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் விவரிக்கப்படுவது இந்நாவலின் சிறப்பு.
    நாம் ஏற்கெனவே கூறியிருந்தது போல் எப்படி எல்லோரும் பாரதியாரைக் கவிஞராக மட்டும் கண்டார்களோ அதே போல் நம் கல்கியையும் வரலாற்றுப் புதின ஆசிரியராகத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள். இது கல்கியின் குறைபாடு அன்று. சரித்திர நவீனங்களின் பழைமைத் தன்மையை சமூக  நவீனங்களில்எதிர்பார்க்கும் வாசகர்களைத் தான் இதற்குக் குறை சொல்ல வேண்டும். அருள் மொழி வர்மன் அரும்பெரும் காரியங்களை ஆற்றுவதாகக் கதையில் காண்பிப்பதற்கு அவன் வாழ்ந்த காலத்தின் பழைமைத் தன்மை மட்டும் காரணமில்லை. அது போன்ற அரும்பெரும் காரியங்களை அவன் உண்மையிலேயே ஆற்றியிருப்பதாய்க் கல்வெட்டுக்கள் சான்று பகர்வதானல் தான் அவர் சரித்திரத்தில் தனித்த ஒளி வீசுகிறான். கல்கியும் அவனைக் கதை மாந்தன் ஆக்க நிச்சயிக்கிறார். நகமும் சதையுமாக நாம் பார்க்கும் சாதாரணர்கள் சமூக நவீனங்களில் உலா வரும் போது வாசகன் தான், தான் எதிர் பார்க்கும் பிரம்மாண்டத்தைத் தளர்த்திக் கொள்ள வேண்டி யிருக்கிறது.
    எது எப்படியிருப்பினும் கல்கியின் நாயகிகள் வசீகரமானவர்கள். அது சரித்திர நவீன மானாலும் சரி சமூக நவீனமானாலும் சரி, கல்கியின் பெண்கள் வனப்பும், புத்தி சாதுர்யமும், பெண்மையின் இலக்கணமும் கொண்டு திகழ்பவர்களாக இருக்கிறார்கள். தியாக பூமியின் நாயகி, அலை ஓசை சீதா ,சிவகாமியின் சபதச் சிவகாமி எல்லோருமே இத்தனை திறமைகளிலும் துக்கப்படுபவர்களாகத் தான் இருக்கிறார்கள். சிவகாமியின் தோழி கமலி, நரசிம்மவர்மர் மனைவி மக்களுடன் ஊர்வலம் வருவதை பார்த்து சிவகாமி வாயடைத்துப் போவதைப் பார்த்துக் கேட்கிறாள்; ‘’  ஏண்டி பார்! ஆளும் வேந்தனைக் காதலித்ததனால் திருமணம் செய்யத்தான் உரிமையில்லாது போய்விட்டது..ஒரு வாய் அழக்கூடவா உரிமை யில்லாதுபோய்விட்டது ? என்று. கல்கியின் பெண்கள் இவ்வளவு தீனமாக இருந்ததற்குக் காரணம் அக் கால சமூக நிலை என்று தான் சொல்ல வேண்டும்.
    எனினும் அந்தப் பெண்கள் புதுமை விரும்பிகள் இல்லை. தியாகம் செய்யும் திடசித்தம் உடையவர்கள் தாம்; மரபை உடைக்கும் திடசித்தம் உடையவர்களாகத் தோன்றவில்லை. பெண்களை விவரிக்கும் போதும் முகத்துக்குக் கீழே வர்ணிக்காத கண்ணியம் அவர்களை மரபு மீறாமல் காப்பதிலும் முனைப்பு காட்டியிருக்கிறது. பெண்டிர் நிறைகாக்கும் காப்பே தலை என்று சொன்ன திருவள்ளுவர் பழைமைவாதி யென்றால் நம் கல்கியும் பழைமைவாதிதான்.
    தமிழ் இலக்கியம் சுதந்திரத்திற்குப் பின்பே இரு கூறாகப் பிளவு பட்டிருந்தது. ஒரு கருத்தை நிறுவுகின்ற லட்சிய நோக்கில் எழுதுவது என்கிறது ஒரு வகையாகவும் வாழ்க்கையை வாழ்க்கையின் போக்கில் அதன் சாதாரண மாந்தர்களுடன் ஆசாபாசங்களுடன் விவரிப்பது என்றும் இரு பிரிவாக இருந்தது. இலட்சிய நோக்கில் எழுதுபவர்கள் வெறும் பொம்மைகளை உற்பத்தி செய்கிறார்கள் என்று யதார்த்த எழுத்தாளர்கள் குற்றம் சாட்டினர். இலட்சியவாதி களோ யதார்த்தவாதிகளை வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறேன் என்கிற பெயரில் அசிங்கங்களை வெளிச்சம் போடுகிறார்கள் என்று குற்றம் சொன்னார்கள்.
    இரண்டிலும் சற்று உண்மையில்லாமல் இல்லை. இலட்சிய வாதிகளின் நாயகர்கள் தரை மீது நடப்பவர்களாக இல்லை. யதார்த்த வாதிகள் பாத்திர விவரிப்பில் வாசகனின் சுய மதிப்பை உயர்த்துவதற்கு எந்த விதமான முயற்சியையும் செய்யவில்லை. விவரிப்பை முடிவை நோக்கி இட்டுச் செல்லும் ஊடகமாக அல்லாது அதையே முடிந்த முடிவாக முன் வைத்தனர்.
    கல்கி இரண்டையுமே சாமர்த்தியமாகச் செய்தார் என்று தோன்றுகிறது. மாந்தர்களை யதார்த்தமாகவும் உலக இயல்புகளை ஒட்டிய குணாதிசயக் கூறுகளுடனும் படைத்த அதே சமயம் தாம் எடுத்துக் கொண்ட நோக்கத்திலிருந்து நழுவாமல் நகர்த்திச் சென்றார். இதுதான் கல்கியின் மேன்மை.
    கல்கியை ஒரு சாரார் பகிரங்கமாக குறை கூறிக் கொண்டே யிருந்தார்கள். அவர் நகைச் சுவையை ‘ ஜெரோம் கே ஜேரோம்’ என்கிற எழுத்தாளரைக் காப்பியடித்தும் நவீனங்களை சர் வால்டர் ஸ்காட், அலெக்ஸாண்டர் டூமாஸ் போன்ற எழுத்தாளர்களைக் காப்பியடித்தும் எழுதினார் என்றும்  குற்றம் சாட்டினார்கள். இக்குற்றச்சாட்டுகளுக்கு ஒன்றிரண்டு முறை அவர் பதில்  சொன்னார். இதர சமயங்களில் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார். புதுமைப்பித்தன் ரஸமட்டம் என்கிற புனைப்பெயரில் காப்பியடிப்பதைப் பற்றி எழுதினார். வாசகர்கள் இவற் றைப் பொருட்படுத்தவில்லை என்பதைவிட இது போன்ற விமர்சனங்கள் அவர்களைச் சென்றடைந்ததா என்பதே சந்தேகம் தான். கல்கி என்கிற காட்டாற்று வெள்ளம் இது போன்ற  தூசிதும்புகளை அடித்துக் கொண்டு போய் விட்டது.
    தமிழர்கள் தமிழ் மொழியின் உரைநடை வளர வேண்டியதன் அவசியத்தை உணர்ந் திருக்கவில்லை. சந்தத்துக்கும் நினைவாற்றலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதால் பிரதியில் சேமிக்க வகையில்லாத காலங்களில் எல்லாவற்றையுமே செய்யுளாக எழுதி வைத்தார்கள். இப்படிப் பார்க்கும் போது உரைநடையின் தேவையையே அச்சு இயந்திரம் புழக்கத்திற்கு வந்த பின் தான் தமிழர்கள் உணரத் தலைப்படலானார்கள். அந்த சமயத்தில் தமிழ் உரைநடைக்கு முன்னோடியாக விளங்கியவை ஐரோப்பிய இலக்கியங்களாதலால் பல சமயங்களில் ஒன்றிரண்டு விஷயங்களை அங்கேயிருந்து ஸ்வீகரித்துக் தான் மொழியை முன்னெடுத்து செல்ல வேண்டிருந்தது.
    கல்கியை விமர்ச்சித்தவர்கள் மேற்கூறிய விஷயத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டார்களா என்பது சந்தேகம் தான். நாவல் பாணியை ஸ்வீகரித்த வீரமாமுனிவர் மீதோ வேதநாகயம் பிள்ளை மீதோ ராஜம் ஐயர் மீதோ எந்த விமர்சகரும் இது போன்ற குற்றச்சாட்டு எதையும் கூறவில்லை நல்ல வேளையாக.
    எது எப்படியிருப்பினும் தமிழ் தொன்மையான மொழி; தமிழ் சரித்திரம் தொன்மை யானது மட்டுமல்லாது பல்வேறு உலக நாகரீகங்களைக் காட்டிலும் காலத்தால் முற்பட்டும் அறிவிலும் பண்பிலும் கலகளிலும் மேம்பட்டும் விளங்கியது என்பதைச் சுவை படவும் பிரும்மாண்டமாகவும் நவீனங்களில் சொன்னவர் முதன் முதலில் கல்கி ஒருவர் தான். கவிதை மூலம் தமிழ் ஸைக்கியை (ஞளுலுஊழநு ) உயர்த்தியவர் பாரதி என்றால் நவீனங்களின் மூலம் அதற்குப் பெருமை தந்தவர் கல்கி தான்.
    இப்படிப் பார்க்கும் போது அவருக்கு முன்னோடிகள் பலர்  இருந்த போதிலும் தமிழ் உரை நடையின் பிதாமகர் என்று கல்கியைத்தான் குறிப்பிடத் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...